மதுரை காமராஜர் சாலை பங்கஜம் காலனி பகுதியில் தேமுதிக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட செயலர் டி.சிவமுத்துகுமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது: தேமுதிக கட்சித் தலைவர் ஆலோசனையின்படி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரின் விருப்பம் அறிந்து பட்டியல் தயாரிக்கவும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம். கட்சிக்கான 59 மாவட்டங்களில் தற்போது 34 மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நேரடியாக அனைத்து இடங்களிலும் போட்டியிடவேண்டும் என்பதே கட்சியினரின் கருத்தாகும்.
தேர்தல் கூட்டணி குறித்து கட்சித்தலைவர் விஜயகாந்த் முடிவு செய்வார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சியை விட்டு விலகியவர்களால் தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சித் தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடந்துகொண்டனர் என ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளோம். ஆகவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரிகள் நடுநிலையோடு வாக்குப்பதிவை நடத்தவேண்டும் என்றார்.