தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளை சிறிய ரக விமானம் மூலம் வீடியோ எடுத்து பாகிஸ்தானுக்கு அருண் செல்வராசன் அனுப்பிய திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. சென்னை சாலிகிராமத்தில் பதுங்கியிருந்த இலங்கை தமிழரான பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி செல்வராசனை, என்ஐஏ போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணை யில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக கடற்கரை பகுதிகளில் சிறிய ரக விமானம் மூலம் பல இடங்களை அருண் செல்வராசன் படம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அருண் செல்வராசனின் லேப் டாப் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சென்னை மட்டுமல்லாது கன்னியாகுமரி வரை தமிழகத்தில் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களையும், மாவட்டங்களில் உள்ள முக்கியமான இடங்களையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பியுள்ளார். குறிப்பாக நிலப்பரப்பில் இருந்து எடுக்காமல் விமானத்தில் இருந்து எடுத்திருப்பதுபோல படங்கள் இருந்தன.
இதனால் அருண் செல்வராசனிடம் போலீ சார் விசாரணை நடத்தியதில், சிறிய ரக விமானம் மூலம் படம் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சிறிய ரக விமானம் மூலம் விஐபி பாதுகாப்பு, ஊர்வலம், குரு பூஜை மற்றும் திருமண விழாக்களுக்கான படங்களை எடுத்து தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களை போலீசார் மட்டுமல்லாது தனியார் நிகழ்ச்சிகளுக்கும் பலர் பயன்படுத்தி வந்தனர். இது தெரிந்ததும், அந்த நிறுவனத்தை அருண் செல்வராசன் அணுகி தனக்கும் படம் எடுத்து தரும்படி கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சென்னையில் தலைமைச் செயலகம், கல்பாக்கம் அணுமின்நிலையம், கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம் விமானப்படை தளம், ராணுவ அலுவலகங்கள் ஆகியவற்றை படம் எடுத்துள்ளார். அதோடு ஆவடியில் உள்ள ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையையும் அவர் இந்த சிறிய ரக விமானம் மூலம் படம் எடுத்திருக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்தப் படங்களை அனுப்பியதற்கான ஆவணங்களை என்ஐஏ போலீசார் கைப்பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கடற்கரை பகுதி முழுவதையும் சிறிய ரக விமானம் மூலம் படம் எடுத்துள்ளார். அதேபோல, சென்னை, கன்னியாகுமரி மட்டுமல்லாது கடலோர மாவட்டங்கள் முழுவதும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்திருப்பதற்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆனால், இவர் தீவிரவாத செயல்களுக்கு எடுப்பது தெரியாமல் மாவட்ட நிர்வாகங்கள் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பல மாநிலங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி படம் எடுத்துள்ளார்.
மாமல்லையில் பலூன் மூலம்.
மாமல்லபுரத்திலும் பலூன் மூலம் வீடியோ கேமராவை பொறுத்தி அதன் மூலமும் படம் எடுத்துள்ளார். இந்த தகவல்கள் என்ஐஏ போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது தமிழகம் குறித்த பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அருண் செல்வராசனின் இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் பல இடங்களில் கடற்கரை வழியாக வந்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கடற்கரை பகுதிகள் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
அதேவேளை, பாகிஸ்தான் உளவாளியை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ போலீசாருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளியான இலங்கை தமிழர் அருண் செல்வராசனை என்ஐஏ போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் முக்கிய இடங்களை படம் பிடித்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பியதும், பல விஐபிக்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தி இருந்ததும் தெரியவந்தது. தமிழகத்தின் முக்கிய இடங்களை அருண் செல்வராசன் படம் எடுத்து அனுப்பியதால், அங்கு தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அருண் செல்வராசனிடம் விசாரணை நடத்த, என்ஐஏ போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஒரு வாரம் போலீஸ் காவலில் அருண் செல்வராசனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மோனி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதற்காக புழல் சிறையில் இருந்து அருண் செல்வராசன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். என்ஐஏ மனு மீது மறுநாள் முடிவெடுப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, நீதிபதி மோனி நேற்று பிறப்பித்த உத்தரவில், அருண் செல்வராசனை 18ம் தேதி (இன்று) பகல் 12 மணி முதல் 23ம் தேதி மாலை 4 மணி வரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அனுமதி வழங்கியிருந்தார். மேலும், அருண் செல்வராசனிடம் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை திருப்பி அனுப்பிய நீதிபதி, இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே சென்னை பொடா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த கோர்ட்டில் ஏன் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதுகுறித்து 10 நாளில் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.