தமிழக மீனவர் ஒருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மீனவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றையதினம் எட்டு மீனவர்கள் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதன் பின்னர் அதனை மறுத்த கடற்படையினர் அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டமையால் குறித்த எட்டு மீனவர்களையும் கைது செய்ததாக தெரிவித்தனர்.
குறித்த எட்டு மீனவர்களையும் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைக்க முயன்ற போது , அவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மீனவர்கள் காயமடைந்த நிலையில் காணப்பட்டமையாலும் , அவர்களிடமிருந்து படகுகளை மீட்காதமையாலும் மீனவர்களை பொறுப்பெடுக்கவில்லை என நீரியல் வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீனவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட கடற்பரப்பு நெடுந்தீவு பொலிஸாரின் கீழ் வருவதனால் அவர்களை நெடுந்தீவு பொலிஸாரே பொறுப்பேற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மாரிசாமி எனும் மீனவரின் சடலத்தை நேற்றிரவு யாழ்.போதனா வைத்திய சாலையில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்த நிலையில் கடற்படை முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.