வங்கக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களில் 500 பேரை, அவர்களின் படகுகளுடன் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்படையினருக்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர ஆணையிட்டுள்ளமையானது, கண்டிக்கத்தக்கது என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை வடக்கு மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசும் போது அமைச்சர் மசிந்த அமரவீர இவ்வாறு கூறியிருக்கிறார். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் தான் பொங்கல் திருநாளுக்கு பிறகு ஒரு மாதத்தில் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்ய கடலோர காவல்படைக்கும், கடற்படைக்கும் ஆணையிட்டிருக்கிறேன். இந்தியா எங்கள் நட்பு நாடு தான். இந்தியா கேட்டுக்கொண்டால் சில காலத்திற்கு பிறகு மீனவர்களை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வோம். ஆனால், மீனவர்களின் படகுகளை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம்’’ என்று இலங்கை அமைச்சர் திமிராக கூறியிருக்கிறார்.
இதில் தெளிவாகத் தெரியும் ஒரு விஷயம் என்னவெனில், ‘‘எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக இலக்கு நிர்ணயித்து கைது செய்யப்படுகிறார்கள்’’ என்பது தான். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் அதில் குறைந்தபட்சம் நியாயம் இருக்கலாம். ஆனால், ஒரு மாதத்திற்குள் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், இந்திய மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு ஒரு தொழிலாகவே வைத்திருக்கிறது என்று தான் பொருள்.
இது இந்தியாவின் வலிமைக்கும், இறையாண்மைக்கும் சவால் விடும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகலானது. அதனால் இரு நாட்டு மீனவர்களையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் மீன்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. அதுமட்டுமின்றி இரு நாடுகளின் கடல் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பிருந்தே பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. அத்தகைய பாரம்பரிய உரிமையை பன்னாட்டு நீதிமன்றங்களும் அங்கீகரித்துள்ளன. இத்தகைய நிலையில் இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தான் சரியான செயலாக இருக்கும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை இலக்கு நிர்ணயித்து கைது செய்வதாக கொக்கரிப்பது சரியான செயலாக இருக்காது, என குறிப்பிடப்பட்டுள்ளதாக, தமிழக ஊடகமான தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.