தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 229 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இதில் கோட்டைப்பட்டி னத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் மன்சூர் (வயது 37), அப்துல்லா (27), செல்வம் (22) ஆகியோர் கடலுக்கு சென்றிருந்தனர். அவர்களும் அதே பகுதியில் மீன் பிடித்தனர்.
அந்த சமயம் அங்கு வந்த, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்துக் கப்பலை பார்த்து, பயந்துபோன ஒரு சில விசைப் படகுகளை சேர்ந்த மீனவர்கள் தங்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் ரமேசுக்கு சொந்தமான படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர் என செய்திகள் வௌிவருகின்றன.
முதலில் தங்கள் ரோந்து படகில் இருந்த கருங்கற்களை எடுத்து மீனவர்கள் மீது சரமாரியாக வீசினர். இதனை சற்றும் எதிர்பாராத மீனவர்கள் நிலை குலைந்தனர். மேலும் அவர்களுக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அதனை சற்றும் கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்துள்ள நீங்கள் இன்னும் ஒருசில விநாடிகளில் இங்கிருந்து செல்லாவிட்டால் சிறை பிடிப்போம் என்று கூறி மிரட்டி விட்டு சென்றனர் எனவும் அறியமுடிகின்றது.
இந்த தாக்குதலில் மீனவர் மன்சூருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே லேசான காயம் அடைந்த மற்ற மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு பாதியிலேயே இன்று வியாழக்கிழமை (04/02/2016) அதிகாலை கரை திரும்பினர் எனவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் வலியால் துடித்த மீனவர் மன்சூரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.