அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். இவர்களோடு தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 5 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் பெயரை முன் மொழிய, நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார்.
அதன்பிறகு அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அலுவலகத்தின் வெளியே குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியான உடன் உற்சாகத்தோடு கொண்டாடினர்.
இதனிடையே ஜெயலலிதாவை, அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்று முதலமைச்சர் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்தனர். அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஜெயலலிதாவுடன் ஆலோசித்தனர்.