ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக த்கெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவில் பேராறு பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களுக்குரிய இலத்திரனில் உபகரணங்கள், தமிழீழ விடுதலை புலிகளின் கொடி, மற்றும் சீருடை ஆகியன மீட்கப்பட்டிருந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்திருந்த நிலையில் , ஒருவர் தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து அரச புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணையை அடுத்து புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதலை அடுத்து ஆங்குளாத்தில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் என்ற இளைஞர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட கேதீஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் திருவையாறு பகுதியைச் சேர்ந்து இரண்டு இளைஞர்களும், சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், மேலும் கைதுகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.