தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட போதும் தொடரும் போராட்டங்கள்!

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் பூர்த்தியாகிய நிலையிலும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இன்றுவரை கிடைக்கவில்லை. யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் கூட பல்வேறு துயரத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவற்றுக்கு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் சாட்சியாக அமைந்துள்ளன. குறிப்பாக யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் இராணுவத்தினரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி, சொந்தக் காணிகளில் இராணுவத்தினர் தங்கியுள்ள நிலையில், மாதிரிக் கிராமங்களிலும், முகாம்களிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்களது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கேப்பாப்புலவு, கிளிநொச்சி, வலிகாமம், மன்னார் போன்ற பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான காணி விடுவிப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையும் தாண்டி யுத்த காலத்தில் இராணுவத்தின் அடக்குமுறைகள் மற்றும் கெடுபிடிகளுக்குள் சிக்கி பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக தங்களது வேலைவாய்ப்பினைக் கோரி வீதியில் இருந்து போராடி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்பொழுது கட்டவிழ்த்து விடப்பட்ட வாள்வெட்டுக் கலாச்சாரம், பாலியல் துஷ்பிரயோகம், பொலிஸாரின் அத்துமீறிய துப்பாக்கிப் பிரயோகம், பௌத்த விகாரைகளின் அதீத தோற்றம், காணி அபகரிப்பு என்பன தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழர் வாழும் பிரதேசங்கள் எங்கும் போராட்டங்கள் மற்றும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த நிலையில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அந்தச் சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாக முன்னர் பருத்தித்துறைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இவற்றிட்கு நீதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அத்துடன், தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு, பௌத்த விகாரைகள் உருவாகி வருகின்றன. இதற்கு எதிராக போராடிய போதிலும் எந்தவிதத் தீர்வும் இன்றி மௌனமாகவே காலம் கடத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவந்த தமிழ் மக்கள், தமக்கான தீர்வு கிடைக்கும் என்று நம்பி ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் மைத்திரி – ரணில் அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் மெத்தனப் போக்கையை கடைப்பிடித்து வருகின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான இந்த போராட்டங்கள் இன்றோ அல்லது நேற்றோ ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்ட போது வித்திடப்பட்டவை. தனிமனிதனால் விதைக்கப்பட்ட அந்த வித்து தற்போது வளர்ந்து விருட்சமாகியுள்ள போதிலும், மக்களுக்கான தீர்வுகள் என்பது இன்றுவரை கேள்வியாகவே உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பலர் செத்து மடிந்தார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் பின்பு தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என எண்ணியவர்கள் கூட, போராட்ட எண்ணத்தை கைவிடும் அளவிற்கு கடந்த காலத்தில் போராட்டத்தில் குரல்கொடுத்தவர்களின் வீர மரணங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறு போராட்டங்கள் கைவிடப்பட்டமைக்கு காரணம் பயம் அல்ல. போராட்டத்தில் தானும் இறந்துவிட்டால், தமிழ் மக்களுக்கான நீதி எங்கிருந்து கிடைக்கும் என்ற எண்ணமே. “நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய். ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது” என்பது போராளி என பெயரெடுத்த சேகுவேராவின் சிந்தனை.

தற்போது இது தமிழ் மக்களின் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்ட என்பதற்கு தமிழர்கள் தாயகம் எங்கும் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் எடுத்து காட்டுகின்றன.

தமிழினத்தின் ஒரு சில உரிமைப் போராட்டங்களுக்கு தீர்வுகள் கிடைத்த போதிலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், தொடர்ந்தும் தெருவில் நின்று போராடும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை மத்திய அரசாங்கமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ கண்டும் காணாதது போன்று உள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், காணி விடுவிப்பு என்பது தீர்வின்றிய நிலையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

தங்களது உறவுகள் உயிருடன் உள்ளார்களா அல்லது காணாமல் போயுள்ளார்களா என்பது கூட தெரியாது முதியோர்கள் முதல் சிறுவர்கள் வரை வீதியில் இறங்கி போராடியும் ஐ.நா மனித உரிமை அமைப்புக்களிடம் தெரியப்படுத்தியும் வருகின்றனர்.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கமும் சரி மைத்திரி – ரணில் அரசாங்கமும் தயக்கம் காட்டியே வருகிறது.

வெளிப்படையாக முட்டி மோதிக்கொள்ளும் இரு அரசாங்கங்களும் குறித்த விடயத்தில் மாத்திரம் ஒரேவிதமான போக்கை கடைப்பிடித்து வருவது சந்தேகத்தை எழுப்புவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால், வடக்கு, கிழக்கில் தமது வேலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகள், அரசாங்கம் எந்த வேலை கொடுத்தாலும் செய்யத்தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்கப் போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இது வடக்கு, கிழக்கில் வேலைக்காகப் போராடும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்று கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொட்டும் மழை, வெயில் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு வேலையற்றவர்கள் எனும் முத்திரை குத்துவது நல்லாட்சி அரசாங்கம் தரும் பரிசா என்றும், இலங்கையின் பிரஜைகளை வீதியில் போராட விட்டு அயல் நாட்டில் இருந்து பணியாளர்களை கொண்டு வருவது தான் நீதியா? கையில் நெய்யிருக்க வெண்ணெய் தேடிய கதையாகவே இது இருக்கிறது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த தமிழ் பேசும் மக்களை தொடர்ந்தும் வீதியில் போராட விடுவது தானா நல்லாட்சி அரசாங்கத்தின் கடமை.

நல்லாட்சி அரசாங்கம் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகத் தொடங்கிவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கம் வழங்கப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைஉள்நாட்டு யுத்தம்கேப்பாப்புலவுதமிழ் மக்கள்புங்குடுதீவு பாடசாலை
Comments (0)
Add Comment