தமிழ்நாட்டின் தலைவர்களை திறனாய்வு செய்யும் தகுதி தமிழீழத்தில் யாருக்கும் இல்லை – கவிஞர் காசி ஆனந்தன்

“தமிழ்நாட்டின் தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஈழத் தமிழர் சிலர் தகாத முறையில் நடந்து கொள்வதை இந்திய-ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் மதிப்புக்குரிய வேல்முருகன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தமிழீழத்தில் யாருக்கும் எந்தத் தகுதியும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

இனவெறி கொண்டு தமிழீழ மக்களை இரண்டு இலட்சம் சிங்களப் படை வெறியர்களின் இரும்புச் செருப்புகளின் கீழ் வைத்திருக்கும் இலங்கை மண்ணில் இன்றுள்ள காலச் சூழலில் மதிப்புக்குரிய ரஜனிகாந்த் அவர்கள் போவது நல்லதல்ல என்பதாலேயே தலைவர் வேல்முருகன் அவர்கள் ‘இப்போது அங்கே செல்லாதீர்கள்” என்னும் பணிவான வேண்டுகோளை முன்வைத்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ”உண்மைக்கும் நீதிக்குமான செய்தித் திரட்டகம்” (INTERNATIONAL TRUTH AND JUSTIC PROJECT) இன்றும் சிங்கள சிறீலங்காவில் படை முகாம்களில் அமைந்துள்ள பல பாலியல்வதை முகாம்களில் (RAPE CAMPS) தமிழ்ப் பெண்கள் சிங்களப் படை வெறியர்களால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுவதாகச் செய்தி வெளியிட்டு உலகை அதிரச் செய்துள்ளது. முள்ளிவாய்க்கால் போரின் போது சிறைப்படுத்தப்பட்ட பெண் விடுதலைப் புலிகளே 8 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாலியல் வதை முகாம்களில் கொடுமைப்படுத்தப் பட்டு  வருகிறார்கள்.

தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள இந்தப் புத்த சிங்கள இன வெறியர்களின் சிறீலங்கா நாட்டிற்கு – இக்கொடிய காலச் சூழலில் ரஜனிகாந்த் அவர்கள் வருகை தருவது. ”அங்கு தமிழ் மக்கள் இயல்பாக வாழ்கிறார்கள் – மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று காட்டுவதாக அமைந்துவிடும் என்பதாலேயே மதிப்புக்குரிய ரஜனிகாந்த் அவர்களின் ஈழப் பயணம் நிறுத்தப்பட வேண்டும் என வேல்முருகன் அவர்கள் பணிவோடு வேண்டினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் கொச்சைப்படுத்தப் பட்டுவிடும் என்பதும், ரஜனிகாந்த் அவர்கள் களங்கப்படுத்தப்பட்டு விடுவார் என்பதும் தலைவர் வேல்முருகன் அவர்களின் கருத்தாக இருந்தது.

முதலில் தனது பயணத்தைக் கைவிட்டதற்காக தமிழீழ மக்கள் சார்பில் எங்கள் நன்றியை ரஜனிகாந்த் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிப்புக்குரிய ரஜனிகாந்த் அவர்கள் தமிழீழ மக்களின் மனம் நிறைந்த அன்புக்குரியவர் ஆவார். உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்கள் மண்ணில் மக்கள் படும் ஆயிரம் துன்பங்கள் நடுவிலும் அவர் மீது கொண்டுள்ள அளவற்ற மதிப்பினால் கோடான கோடி பணத்தை அவர் திரைப்படங்களுக்கு வழங்கி மகிழ்கிறார்கள்.

இமயமலை அடிவாரம் வரை சென்று இந்துத் தெய்வங்களை, மகாத்மாக்களை, தவசிகளை எல்லாம் வணங்கி இன்புற்று வாழ்வதே வாழ்வெனக் கருதி இருப்பவர்  ரஜனிகாந்த் அவர்கள்.

தமிழீழத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான இந்துக் கோயில்களில் குண்டுகளை வீசி, இந்துத் தெய்வச் சிலைகளை உடைத்தெறிந்து, இந்து அர்ச்சகர்களைக் கொன்று குவித்து வேட்டையாடிய இன்றும் இந்துக் கோயில்களின் உள்ளே புத்த சிலைகளைத் திணித்துக் கொண்டிருக்கிற சிங்கள சிறீலங்கா மண்ணை இக்காலகட்டத்தில் ரஜனிகாந்த் அவர்கள் மிதிக்கலாமா?

இடுக்கண் நிறைந்த இக்காலச் சூழலில் சிங்கள சிறீலங்கா செல்லாதீர்கள் என ரஜனிகாந்த் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தலைவர் வேல்முருகன் அவர்கள் மீது இன்று சிலர் பாய்ந்து விழுகிறார்கள். தமிழீழத்தில் இருந்து சிலர் இக்கருத்தை முன்வைப்பது அவர்கள் தமிழீழ மண்ணுக்கே செய்யும் இரண்டகமாகும்.

தனது 13ஆவது அகவையிலேயே மாணவப் பருவத்திலேயே தமிழ் நாட்டில் நடைபெற்ற ‘தமிழீழ விடுதலைப் போராட்டங்களில்” பங்கு கொண்டு பணியாற்றியவர் வேல்முருகன் அவர்கள். ”தமிழீழக் கொள்கையைக் கைவிட்டு விட்டோம்” என்ற தமிழீழத் தலைவர்கள் சிலரே தந்தை செல்வாவைக் காலால் எட்டி உதைக்கும் இக்காலத்தில் – இன்றும் ”தமிழீழம் ஒன்றே தமிழீழ மக்களின் தணியாத வேட்கை” என்று முழக்கமிடுகிறவர் வேல்முருகன் அவர்கள். தமிழ்நாட்டில் வீறுமிக்க அனைத்து இளைஞர் அமைப்புகளையும் ஒன்று திரட்டி இன்று தமிழீழ விடுதலைக்காக ஓயாது, உறங்காது போராடி வருகிறவர் வேல்முருகன் அவர்கள்.

தமிழீழ விடுதலைக்கு உலகம் தழுவிய தமிழரிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய – தமிழீழ விடுதலைக்காகத் தீக்குளித்தும் – சிறைவாசம் கண்டும் போராடிய தமிழ் நாட்டின் தலைவர்கள் யாரையும் திறனாய்வு செய்யும் தகுதி தமிழீழத்தில் யாருக்கும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காசி ஆனந்தன்தமிழீழ மக்கள்தமிழ்ர் வாழ்வுரிமை கட்சிவிடுதலைவேல்முருகன்
Comments (0)
Add Comment