கடந்த ஜனவரி 17-ம் தேதி முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தொடங்கியது. அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் சென்னை மெரினாவிற்கும் பின்னர் தமிழகம் முழுவதிற்கும் பரவியது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அறவழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் ஆமோக ஆதரவு இருந்தது.
இதன் உச்சமாக சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தினை ஒரு திருவிழா போல் நடத்தி வந்தனர்.
தேசிய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் மெரினாவில் நடைபெற்ற போராட்டம் கவனிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்களது ஆதரவை வழங்கினர்.
இவ்வளவு அமைதியாக சென்ற போராட்டத்தில் சென்னையில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்துவிட்டது. போராட்டம் முடைந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட
வேண்டிய நேரத்தில் தேவையில்லாத ஒரு சம்பவமாக இது அரங்கேறி விட்டது.
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் இல்லை என்று சமூக விரோதிகள் பலர் உள்ளே புகுந்து விட்டதாகவும் பலர் தெரிவித்தனர்.
இதில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் சம்பவத்தை கையாண்ட விதத்தை பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
இதனிடையே, நேற்று காலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலரும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று வந்தனர்.
பல்வேறு இடங்களில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை களைத்தனர். கோவை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை களைத்தனர்.
இந்நிலையில், சென்னையில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாகவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கமிஷர் ஜார்ஜ் தெரிவித்தார். போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.