இந்த மெட்ராஸைத் தான் மதராஸ பட்டினம் அல்லது சென்னப்பட்டினம் என்ற பெயரில் கிராமமாக கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது. இது நடந்து 17ம் நூற்றாண்டில், அதாவது 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி.
எனவே தான் அன்றைய தினம் மதராஸ் பிறந்த தினமாக மாறியது. அதன்படி, சென்னைக்கு இன்று 378வது பிறந்த தினம்.
கிழக்கு கடற்கரை ஓரமாக, பிரான்சிஸ் டே எனும் ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட 3 சதுர மைல் நிலப்பரப்பு தான் இன்று சென்னையாகி உள்ளது. தற்போது சட்டசபை செயல்படும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தான் அந்த சிறிய நிலப்பரப்பு. காலனி ஆதிக்கம் அங்கிருந்து பரவத் தொடங்கியதும், சென்னை மேலும் விரிவடையத் தொடங்கியது.
தற்போது அது புறநகர்களையும் உருவாக்கி, அதனை தாண்டியும் விரிவடைந்து வருகிறது. ஆரம்பத்தில் அவ்வளவாக மெட்ராஸ் டே என்ற கொண்டாட்டங்கள் முளைக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையின் பிறந்த நாளாக முதல் முறையாக அதிகாரபூர்வமாக கொண்டாடப்பட்டது.
ஆரம்பத்தில் ஆங்கிலேயரும், குறிப்பிட்ட சில உயர் அந்தஸ்து பிரிவினரும் மட்டுமே மெட்ராஸ் டே கொண்டாடினர். சுதந்திரத்திற்குப் பின் கடந்த 1989ம் ஆண்டு 350ம் ஆண்டு மெட்ராஸ் டே விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
சென்னை தினம் கொண்டாடும் ஐடியா மக்களிடம் 2004ம் ஆண்டுதான் மேலோங்கியது. 2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையின் பிறந்ததினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஒரு தினமாக இருந்த கொண்டாட்டம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து தற்போது அதிகபட்சமாக 15 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. சென்னையின் பிறந்தநாள் என்றால் சும்மாவா, அன்றைய தினம் விழாக்கோலம் பூணும் நகரில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் இவ்வளவு உற்சாகமாக சென்னையின் பிறந்தநாளைக் கொண்டாடினாலும், காலனி பாரம்பரியமாக கருதி சென்னை தின கொண்டாட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.