சட்டசபையில் நாளை காவல்துறை மானியக்கோரிக்கை தொடர்பான நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், தலைமைச் செயலகத்திற்குள் எம்எல்ஏக்கள் கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபையில் கடந்த 17ம் தேதி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை 29ம் தேதி வரை இடைக்கால நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை கண்டித்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் சட்டசபையில் நாளை காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளையும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால் முன்னேச்சரிக்கையாக எம்.எல்.ஏ.க்களின் கார்களை தலைமைச் செயலக வளாகத்துக்குள் விடாமல், எதிரேயுள்ள கார் நிறுத்தப் பகுதிக்கு திருப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தலைமைச் செயலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும், அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.