நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் .
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
தாக்குதல்களைச் செய்தவர்களை மனிதர்கள் என்று எவரும் சொல்லிவிட வேண்டாம் என்றும், கடவுளின் பெயரால் ஓர் இனத்தை – மதத்தை அழிக்க முடியாது எனவும், இந்தக் கொலை வெறியை எந்த மதமும் ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குத் தேவையான வெடிபொருள்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வெடி பொருள்களைக் கொண்டு வருவதற்காக அரச அதிகாரி களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றிருக்குமாயின் அவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.