சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கொளத்தூரில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட முடிவு உள்ளதாக தெரிகிறது. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்பு பெயர் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவான ஜெ.அன்பழகனுக்கே மீண்டும் வாய்ப்பு எனவும், ஆயிரம்விளக்கு தொகுதியில் ஏ.ஏ. ஜின்னா போட்டியிடுவார் எனவும் தெரிகிறது. இதுபோல், துறைமுகம் தொகுதியில் பி.கே. சேகர்பாபுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகர் தொகுதியில் சியாமளா முத்துச்சோழன் அல்லது ஏ.டி.எஸ்.மணி, விருகம்பாக்கம் தொகுதியில் கே.கே.நகர் தனசேகரன் அல்லது வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவின் பெயர் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன், வேளச்சேரியில் நடிகர் வாகை சந்திரசேகர் மற்றும் ஆலந்தூர் தொகுதியில் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுபோல், தாம்பரம் தொகுதியில் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரத்தில் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யசோதா ஆகியோரின் பெயர் திமுக கூட்டணியின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.