வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகின்றன. அதேசமயம், கூட்டணி பேரமும் நடந்து வருகின்றன. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், கூட்டணி குறித்து தனது விருப்பத்தை பதிவிட்டுள்ளார். அதில், மு.கருணாநிதி முதல்வராவதை தவிர்ப்பார் என்றும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் சுவாமி விருப்பம் தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கூட்டணி டிவீட், தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ளது. முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல், பாஜக தலைமையும், அடிக்கடி விஜயகாந்த்தை சந்தித்து பேசி வருகின்றனர்.
ஆனால், விஜயகாந்த் இதுவரை மவுனம் சாதித்து வருகிறார். இதனிடையே, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள் இணைந்த மக்கள் நல கூட்டணிக்கு வர விஜயகாந்த்துக்கு அதன் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது வரை இல்லாத வகையில், இந்த முறை முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சும் அதிகமாக அடிபடுகிறது. இதுகூட கூட்டணி முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தோன்றுகிறது.