திராவிட இயக்கத்தை எவராலும் நசுக்க முடியாது! ஸ்டாலின்

திராவிட இயக்கத்தை நசுக்கும் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று சென்னையில் நடந்த நீதிக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீதிக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-

திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு இந்த அரங்கம் தான் உதாரணம். இந்த மேடையில் இருப்பவர்கள் எந்த குலம்? என்று பேதம் பார்க்காமல், இவர்கள் மனித குலத்துக்கு என்ன செய்தார்கள்? என்பதை நாம் பார்க்கிறோம்.

அதுதான் நூற்றாண்டு விழாவில் திராவிட இயக்கத்தினுடைய மாபெரும் வெற்றி. இந்த வெற்றி தமிழகம், தென்னகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை.அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று, முயற்சி நடக்கிறது. இதுவரை அது பலிக்கவில்லை.

இனிமேலும் அது பலிக்க போவதில்லை. எத்தனை அம்புகள் தன்னை நோக்கி பாய்ந்தாலும், திராவிட இயக்கத்தை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. போர்வாள்களாக விளங்கிக்கொண்டு இருக்கும் திராவிட கழகமும், தி.மு.க.வும். ஆயிரம் காலத்து பயிர். யாரும் எளிதில் அறுவடை செய்யமுடியாது.

இந்த நூற்றாண்டு விழாவோடு எல்லா வகையிலும் பின்னி பிணைந்திருப்பவர் 93 வயது நிறைந்த நம் தலைவர் கருணாநிதி. அதேபோல உணர்வாளர் 94 வயதான பேராசிரியர் க.அன்பழகன்.

இப்படிப்பட்ட வரலாற்றை கொண்ட தலைவர்களை எந்த இயக்கமாவது பெற்றுள்ளதா? பார்க்கத்தான் முடியுமா? இந்த நூற்றாண்டு விழாவிலே, இளைஞர்களை நாற்றங்கால்களாக, பெண்களை இலக்கணமாகவும், சமூகத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய தி.மு.க. என்றென்றும் தமிழ் மொழிக் காக, தமிழ் மக்களுக்காக, அவர் களது வளர்ச்சிக்காக உறுதி மூச்சோடு, முழு மூச்சோடு தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதி ஏற்கிறது. உங்களுடன் சேர்ந்து அந்த உறுதி மொழியை நானும் ஏற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, எழுத்தாளர்கள் க.திருநாவுக்கரசு, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னைசெயலாளர்தமிழகம்தி.மு.க.திராவிட இயக்கம்மு.க.ஸ்டாலின்
Comments (0)
Add Comment