திருமண நிகழ்வுகளை முன்னெடுக்கும் போது பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாவிட்டால் விரைவில் ‘திருமணக் கொத்தணி ‘ உருவாகும் வாய்ப்புள்ளது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
அதிகபட்சம் 150 பங்கேற்பாளர்கள் அல்லது 25 சதவிகித இருக்கை வசதி கொண்ட திருமணங்களை நடத்த சுகாதார அமைச்சு அனுமதித்துள்ளது.
இருப்பினும், மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் குறிப்பிட்ட திறனை மீறிய அளவில் திருமணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“கட்டுப்பாடுகள் அல்லது வழிகாட்டல்களை மதிக்காமல் சில பகுதிகளில் திருமணங்கள் நடத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 250 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூட சில திருமணங்களில் பங்கேற்றுள்ளதாக அறிய கிடைக்கின்றது. குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் ஒரு ‘திருமண கொத்தணி ‘ வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தினால் நிலைமை ஆபத்தானது.
நாளாந்தம் 1,500 இற்கு மேற்பட்ட கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், எதிர்வரும் வார இறுதி தொடர் விடுமுறையின் போது பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.