இதற்காக அவர் மாதிரி திருவள்ளுவர் சிலை ஒன்றை கன்னியாகுமரியில் இருந்து கங்கை பயணம் என்ற பெயரில் எடுத்து செல்கிறார். இந்த பயணம் கடந்த 18-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. இந்த பயணம் நேற்று சென்னை வந்தடைந்தது. சென்னையில் இருந்து கங்கை பயணத்தை தமிழக கவர்னர் கே.ரோசய்யா நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன், நிலைக்குழு உறுப்பினர்களான எம்.பி.க்கள் பி.பி.சவுத்ரி, பாரத் சிங், ரஜினி பாட்டீல், மஜித் மாம், ஏ.சம்பத், உதயகுமார், வரபிரசாத் ராவ், வி.வி.நாயக், பகவந்த் மான், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகி சூர்ய நாராயண் ராஜி, ராமகிருஷ்ண மடம் சென்னை மேலாளர் விபுதானந்தஜி, கவிஞர் வைரமுத்து மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-
திருக்குறள் ஒரு பொக்கிஷம். காலத்தால் நிலைத்து நிற்கக்கூடியது. உலகிற்கு பொதுவானது. எல்லா நேரத்துக்கும் பொருந்தக்கூடியது. மனித உணர்வுகளின் மிக தூய்மையான வெளிப்பாடுகள். உலகின் பிற எல்லா இலக்கியங்களிலும் மேலானது.
உயர்வான விவேகத்தை அளித்து, வாழும் கலையை கற்பித்து வழி நடத்துகிறது. தமிழ் மொழி என்னும் கிரீடத்தில் வைரமாக மின்னுகிறது. தமிழ் இலக்கிய படைப்புகளில் நட்சத்திரமாக மின்னுகிறது.
திருக்குறளின் வளமும், திருவள்ளுவரின் புகழும் இந்த நாட்டில் மட்டும் அல்ல உலகம் எங்கும் அறியப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், தருண் விஜய் எம்.பி. பேசியதாவது:-
இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். தமிழக மக்கள் என்னை அவர்களின் தம்பியாக கருதுகிறார்கள். என்னை தருண் விஜய் என்று அழைப்பதைவிட ‘தருண் தமிழ் விஜய்’ என்று அழையுங்கள். திருவள்ளுவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் இந்தியா ஒட்டுக்கும் சொந்தமானவர்.
இந்திய வரலாறு என்பது வீர சிவாஜி போன்ற வடமாநில மன்னர்களுடன் முழுமையடையாது. தமிழக மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களையும் சேர்த்து தான் முழுமை அடையும்.
திருவள்ளுவர் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் திருவள்ளுவர் குறித்த ஆய்வு இருக்கைகள் அமைக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தற்போது தருண் விஜய் செய்து வருவது மதத்திற்கு அப்பாற்பட்டது. இதில் எந்த அரசியலுக்கும் இடம் இல்லை. அரசியலுக்கு இடம் இருந்தால் மாற்று கட்சியினர் இங்கு வந்திருக்க மாட்டார்கள். நேற்று (நேற்று முன்தினம்) உலக யோக தினம் கொண்டாடப்பட்டது. அதே போன்று வள்ளுவர் பிறந்தநாளை பொதுமறை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடும் நாள் வர வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.