தி.மு.க. பிரமுகரின் பெயரை சேர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்

பல்லாவரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியலில் தி.மு.க. பிரமுகரின் பெயரை சேர்க்க வலியுறுத்தி தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூகாலனி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஆவார்.

இவர், தனது பெயரை பல்லாவரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து இருந்தார்.   ஆனால் அவருடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் தடுக்க சதி நடப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும், வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயரை சேர்க்கும் வரையில் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறி நேற்று பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர்.     அப்போது பல்லாவரம் நகராட்சி ஆணையாளரும், நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமார், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்த அறிக்கை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து 200–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காமராஜ் தலைமையில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் இல்லாததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் கோட்டாட்சியர் வரும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி கோட்டாட்சியர் அலுவலக அறையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.    இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு ஏராளமான போலீசார் வந்தனர். தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மற்றும் ஏராளமான தி.மு.க.வினரும் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று இரவு தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகநகராட்சிபட்டியல்பல்லாவரம்பிரமுகர்போராட்டம்வாக்காளர்
Comments (0)
Add Comment