தே.மு.தி.க.வில் இருந்து விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள், 10 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு எதிராக மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 3 தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்தீபன், சி.எச். சேகர் ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில் தி.மு.க.வுடன் மக்கள் தே.மு. தி.க.வை இணைக்க முடிவு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைப்பாளர்கள் சந்திர குமார், எஸ்.ஆர்.பார்த்தீபன், சி.எச்.சேகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தேனி முருகேசன், ஈரோடு சிவக்குமார், செந்தில்குமார், வேலூர் விஸ்வநாதன், திருவண்ணாமலை கார்த்திக், செஞ்சி சிவா, சேலம் வக்கீல்கள் அண்ணாமலை, லட்சுமண பெருமாள், ஜலகி மாதேஷ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* மக்கள் தே.மு.தி.க.வுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி 3 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி தந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது.
* தமிழக மக்களின் ஆதரவோடு மாபெரும் எதிர்க்கட்சியாக தி.மு.க. உருவாகியுள்ளது. அதற்காக உழைத்த கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவிக்கிறது. * விரும்பாத கூட்டணியை தன் சுயநலத்திற்காக அமைத்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய காரணமாக இருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி, பணதையும் செலவு செய்து தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் எங்கள் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள் இனி தாமதம் செய்யாமல் தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் மாற்றத்தை தி.மு.க.வால் மட்டுமே கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது வலுப்பெற்று உள்ளது. அதே நம்பிக்கையுடனும், சுய மரியாதையுடனும் அரசியல் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்றால் தமிழர்களின் உணர்வோடு கலந்த இயக்கமான தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மக்கள் தே.மு.தி.க. என்ற தனி அமைப்பாக செயல்படுவதை விட தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக.ஸ்டாலின் ஆகியோரின் தலைமையை ஏற்று நாம் அனைவரும் தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது என்றும், மக்கள் தே.மு.தி.க. என்னும் அமைப்பை தி.மு.க.வில் இணைப்பது என்றும் இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.