தீவிர தேர்தல் பிரசாரத்தில் வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பி்ல் போட்டியிடும், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவையை அடுத்துள்ள தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உள்ளியம்பாளையம் கிராமத்தில் விவாசய குடும்பத்தில் பிறந்த வானதி சீனிவாசன், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றபோது, பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகிலா பாரத வித்யாதி பரிஷத்தில் இணைந்தார். பின்னர் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற வானதி, சென்னை உயர் நீதிமன்றத்திலும், சிலகாலம் உச்ச நீதிமன்றத்திலும் பணியாற்றினார். தற்போது தமிழக பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் வானதி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

சென்னையில் வசித்து வரும் வானதி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் கோவைக்கு குடியேறிவிட்டார். நாள்தோறும் பலதரப்பிலான மக்களை சந்தித்து, வாக்குகளை சேகரித்து வருகிறார். இணையதளத்தில் www.vanathibjp.in என்ற இணையப்பக்கத்தையும் உருவாக்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ‘காஃபி வித் வானதி’  என்ற நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சுமார் 6000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார். தற்போதைய தேர்தலில் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், வானதி வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

கோவைதுணைத்தலைவர்தொகுதிபாஜகபிரச்சாரம்போட்டிவானிதிசீனிவாசன்
Comments (0)
Add Comment