தூய்மை இந்தியா திட்டத்தில் பேஸ்புக்கும் பங்கேற்று உதவுவதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜூகர்பெர்க், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதி அளித்துள்ளார். பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம் கோடீஸ்வரர் ஆனவருமான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜூகர்பெர்க் இந்தியா வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதில், பல்வேறு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வது குறித்து மோடி கவலை தெரிவித்தார். ‘தீவிரவாதத்தை தடுப்பதில் சமூக வலைதளங்களும் பங்காற்ற வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், தூய்மையான இந்தியா திட்டம் குறித்து மோடி தெரிவித்ததும், அதற்கு உதவும் வகையில், பேஸ்புக் மூலம் புதிய மொபைல் அப்ளிகேஷனை உருவாக்குவதாக ஜூகர்பெர்க் உறுதி அளித்துள்ளார்.
இந்த அப்ளிகேஷன் தூய்மை இந்தியா திட்டத்தை பரப்புவதற்கு உதவும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த சுற்றுலா தலங்கள் குறித்த ஆர்வத்தை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஊக்குவிப்பது, டிஜிட்டல் இந்தியா முயற்சி உள்ளிட்டவைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசித்தனர். முன்னதாக, ஜூகர்பெர்க், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தையும் சந்தித்து பேசினார்.