இந்தியாவில் உள்ள மாநகரங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் முழு சுகாதார நிலையினை உருவாக்குவதற்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் மாநகரங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த 4-ந்தேதி முதல் வருகிற 20-ந்தேதி வரை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியை தரவரிசை பட்டியலுக்கு பரிந்துரை செய்யும் ஆய்வுக்குழுக்களுடன் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தரவரிசை பட்டியலுக்கான பார்வையிடும் பகுதிகள், திட்டப்பணிகள் அதன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 11-ந்தேதி வரை நடக்கும் இந்த 3 நாள் ஆய்வில் துப்புரவு நடவடிக்கைகளை களஆய்வு செய்வதோடு பொதுமக்களின் கருத்துக்களையும் இக்குழுவினர் கேட்க உள்ளனர். கடைசி நாளான 11-ந்தேதி மாலை மீண்டும் சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் விவாதிக்க உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் மாநகரின் தூய்மையை குறித்து தாங்களே கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800-267-2777 மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
மேற்கண்ட தகவல்கள் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.