தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது உறுதி! மத்தியரசு

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடியிலான இந்த திட்டத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைத்து நியூட்ரினோ சோதனைகளை நடத்தப்படும் என அரசு தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதியை ரத்து செய்யக் கோரியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 20-ம் தேதி நடந்த போது, மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பாராளுமன்ற மக்களவையில் இந்திய அணுசக்தி துறை இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையத்தை வேறு மாநிலங்களுக்கு மாற்றும் எண்ணம் இல்லை, உறுதியாக திட்டமிட்டபடி தேனியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் இத்திட்டம் தாமதமாகியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் தொடங்கப்படும் எனவும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக விளக்கம்
அளித்துள்ளார்.

ஆய்வு மையம்தமிழகம்தேனீநியூட்ரினோ ஆய்வு மையம்மத்தியரசு
Comments (0)
Add Comment