தேமுதிகவின் நெல்லை பொதுக்கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் சட்டசபை தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிடும் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் பேச வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து “பழம் நழுவி பாலில் விழும்” என காத்திருந்த திமுகவுக்கான தேமுதிகவின் கதவுகள் சாத்தப்பட்டுவிட்டதாக பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே நேரத்தில் தேமுதிக தலைமையை ஏற்பதில் பாஜக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விரும்பவில்லை. இதனாலேயே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேப்டன் மோடிதான் என்று பாஜகவும், மக்கள் நலக் கூட்டணி என்ற விமானம் டேக் ஆப் ஆகி விட்டது; தேமுதிகவும் வரலாம்; ஆனால் தேமுதிக தலைமை ஏற்க முடியாது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோவும் கூறி வந்தனர்.
இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்கான முயற்சிகளை காங்கிரஸ் முன்னெடுத்தது. இதனடிப்படையில் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய கருணாநிதி, திமுக கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை; தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவிக்க அரசியல் களம் சூடானது. கருணாநிதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவும் மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரும்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என மீண்டும் ஸ்ருதியை மாற்றினர்.
இப்படியான பரபரப்பான சூழ்நிலையில் வரும் 25-ந்தேதி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என பேச உள்ளார். அனேகமாக இந்த கூட்டத்தில் விஜய்காந்தும் பங்கேற்று திமுகவுடனான கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக வெளியிடலாம் எனவும் கூறப்படுகிறது.