தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம் எல் ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.இந்த விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினருடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும்,இடைநீக்கம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசும்போது, ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால்,சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து,பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேருக்கும் விளக்கம் கேட்டு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. உரிமைக்குழுவின் பரிந்துரையின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் இடைநீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.