தேர்தல் பணிகளை பார்வையிட மத்திய தேர்தல் பொது பார்வையாளர்கள் 8 பேர் சென்னை வர உள்ளனர். வருகிற 29-ந் தேதி முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேட்பாளர்களின் செலவினங்களை பார்வையிட மத்திய தேர்தல் பார்வையாளர்கள் 8 பேர், கடந்த 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முதல்கட்ட கண்காணிப்பு பணியினை முடித்துள்ளனர். 2-ம் கட்டமாக மே 5-ந் தேதி முதல் தேர்தல் முடியும் வரை தொடர்ந்து முகாமிட்டு மேற்பார்வை செய்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் சென்னை தேர்தல் பணிகளை பார்வையிட மத்திய தேர்தல் பொது பார்வையாளர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 8 அதிகாரிகளும் வருகிற 29-ந் தேதி முதல் சென்னையில் ஆய்வு மேற்கொள்ள சென்னை வரவுள்ளனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை சென்னையிலேயே தங்கி தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள்.
தேர்தல் பொது பார்வையாளர்கள் பெயர் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:-
* டாக்டர் எம்.பீனா (கேரளா) – ஆர்.கே.நகர், பெரம்பூர்.
* ராணி ஜார்ஜ் (மேற்கு வங்காளம்) – கொளத்தூர், வில்லிவாக்கம்.
* டொமா ஷெரிங் ஷெர்பா (மேற்கு வங்காளம்) – திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி).
* சுவரூப் குமார்பால் (மேற்கு வங்காளம்) – ராயபுரம், துறைமுகம்.
* பெல்லாட்டி பெர்ட்டின் (அருணாச்சல பிரதேசம்) – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு.
* சஜிதா இஸ்லாம் ரஷித் (அசாம்) – அண்ணாநகர், விருகம்பாக்கம்.
* டாக்டர் ஜோதி புத்தா பிரகாஷ் (தெலுங்கானா) – சைதாப்பேட்டை, தி.நகர்.
* சாங் டிங்கிளியானா (மிசோரம்) – மயிலாப்பூர், வேளச்சேரி.