தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதிகள், தேர்தல் செலவு கண்காணிப்பு தொடர்பான விளக்கங்கள், அரசியல் கட்சியினர் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, தேர்தல் ஊர்வலங்கள், வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தேர்தல் பணிக்கு வாகனங்களை பயன்படுத்துதல், தேர்தல் குற்றங்கள் போன்றவை குறித்து விளக்கமாக எடுத்து கூறப்பட்டன.
செலவு கணக்கு விவரங்கள்:
மேலும், தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் கம்பிவட ஊடகங்கள் மூலம் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அளித்தல், அனுமதி சான்றிதழ் கோருதல், தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் செயல்பாடுகள், பறக்கும் படை வாகனங்களை ஜி.பி.எஸ். முறையில் கண்காணிக்கப்படுவது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிக்கும் முறை, வங்கி பணபரிவர்த்தனை, டாஸ்மாக் கடை விற்பனையை கண்காணித்தல், வாக்குசாவடி அளவில் விழிப்புணர்வு குழுக்களின் செயல்பாடுகள், தேர்தல் செலவு கணக்கு விவரம் தயாரிப்பு மற்றும் ஆய்வு, மாவட்ட செலவின கண்காணிப்புக்குழு செயல்பாடுகள் போன்றவை பற்றி விளக்கமாக அரசியல் கட்சியினருக்கு எடுத்து கூறப்பட்டது.
தமிழ்நாடு பொதுத்தேர்தலில் புது முயற்சியாக ஒற்றை சாளர முறையில் மனுக்களை பரிசீலித்தல், தேர்தல் படிவங்களை இணையதளம் மூலம் சமர்ப்பித்தல், புகார் மற்றும் அறிக்கைகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் மென்பொருள் மூலம் பெறுதல் போன்றவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிர்லோஷ்குமார், இணை தலைமை தேர்தல் அதிகாரி, அ.சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த பொள்ளாச்சி வி.ஜெயராமன், தி.மு.க.வின் டி.கே.எஸ்.இளங்கோவன், வக்கீல் கிரிராஜன், பாரதீய ஜனதா கட்சி சார்பில் கே.டி.ராகவன், வி.பாலசந்திரன், காங்கிரஸ் சார்பில் எம்.ஜோதி, தே.மு.தி.க. சார்பில் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், வக்கீல் சந்தோஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சண்முகம், பாக்கியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.எம்.மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எஸ்.ரஜினிகாந்த், ஜெ.பாரதிதாசன், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சி.பி.சாரதி, எம்.அபுபக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பூத் சிலிப்பை அடையாள ஆவணமாக காட்டி வாக்களிக்கும் முறையை நீக்கவேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையை மட்டுமே வைத்து வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்ற கருத்தை எழுப்பியிருக்கிறோம்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்படும் தபால் ஓட்டுகள் பாதிக்கு மேல் பதிவாவதில்லை. பதிவாகும் வாக்குகள் பலவும் செல்லாததாகிவிடுகின்றன.
100 சதவீத வாக்குப்பதிவை எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடுகிறவர்களும் முழுமையாக வாக்களிக்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கென்று தனி வாக்குப்பதிவு எந்திரம் வைக்கலாம் என்று கூறியிருக்கிறோம்.
வெள்ள நிவாரணம்:
20-ந்தேதியன்று பலரது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் என்று பணம் போடப்பட்டுள்ளது. இதுபற்றியும் நடவடிக்கை எடுக்க கோரினோம்.
அரசு வழங்கும் தண்ணீர் பாட்டிலில் உள்ள இரட்டை இலை சின்னத்தை நீக்கவும் கோரியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் இருந்து 10 லட்சம் பெயர்களை நீக்கியதாக கூறியிருந்தாலும், அதில் இருக்கும் போலி வாக்காளர்கள் பெயர்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து கொண்டே இருக்கிறோம்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அலுவலர்களை கண்காணித்து, புகைப்படம் எடுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவும் திட்டமிட்டிருக்கிறோம்.
பூத் சிலிப்புக்கு அனுமதி குறித்து கே.டி.ராகவன் கூறியதாவது;-
தேர்தல் வாக்குறுதிகள், இலவச திட்டங்கள் அறிவிப்பு போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு சில வழிகாட்டிகளைக் கொடுத்துள்ளது. அதை அப்படியே அமல்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளோம்.
சில கட்சிகளுக்கென்று தனி தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த டி.வி.யில் அந்த கட்சிக்காக வெளியிடப்படும் விளம்பரங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப் கொடுக்கின்றனர். அரசியல் கட்சியினர் கொடுத்தால், அது சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியோடு கொடுக்கப்பட வேண்டும்.
விழிப்புணர்வு-கான்ஸ்டன்ட் ரவீந்திரன் கூறியதாவது;-
தேர்தல் தொடர்பான புகார்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைப் பற்றி கூறினார்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தலுக்கான அதிகாரிகள், அலுவலர்களின் கையில்தான் உள்ளது.
ஆனால் தேர்தல் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு தேர்தல் கமிஷன் கொண்டு வரும் சட்ட நடைமுறைகள் தெரிவதில்லை. எனவே அவர்களுக்கு போதுமான அளவில் பயிற்சி, விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
வேட்பாளரின் தேர்தல் செலவைக் கணக்கிடுவதில் சில குளறுபடிகள் இருக்கின்றன. இதையும் எடுத்து கூறினோம்.
தேர்தல் செலவீனம் பற்றி சண்முகம் கூறியதாவது;-
தேர்தல் செலவீன கணக்கீட்டுக்காக, ஒவ்வொரு பொருளுக்கான விலையை நிர்ணயித்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் விலை பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறைக்குப் பொருந்தவில்லை. அதை திருத்தி அமைக்கும்படி கோரியுள்ளோம். அதை பரிசீலிப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் பிரசாரத்துக்கு தேவைப்படும் அனுமதிகளை வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.