தே.மு.தி.க. இற்கு124 தொகுதிகள் – மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள்

தே.மு.தி.க. அணிக்கு 124 தொகுதிகளும் மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தங்களுக்கு இடையே தொகுதிகளை பங்கீடு செய்வது குறித்து பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகிய 4 பேரும் ஒவ்வொருவரும் அதிக தொகுதிகளை கேட்டனர். குறிப்பாக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று பேச்சு வார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஏற்கவில்லை. கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுஅவர்களது தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இடையே தொகுதி பங்கீடு செய்வதில் ஒருமித்த முடிவை எட்ட 4 தலைவர்களும் பலமுறை கூடி பேசினார்கள். இதில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 4 கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் ஒன்று, இரண்டு தொகுதிகள் கூடுதலோ, குறைவாகவோ பகிர்ந்து கொள்வது என பேசி முடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கூடடணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் வைகோவிற்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 28, மார்க்சிஸ்டுக்கு 27, இந்திய கம்யூனிஸ்டுக்கு 26 என்ற அளவில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மக்கள் நலக் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு செய்யப்பட்டதை அடுத்து எந்தெந்த தொகுதிகளில் நிற்பது என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை விஜயகாந்திடம் ஓரிரு நாளில் கொடுத்து விடுவார்கள்.

அதன் பின்னர் எந்தெந்த தொகுதிகளில் யார்–யார் போட்டியிடுவது என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும். 234 தொகுதிகளில் பட்டியலையும் வைத்து 5 கட்சிகளில் யாருக்கு எந்த தொகுதிகளில் செல்வாக்கு, பெற்ற ஓட்டுக்கள் போன்றவற்றை மையமாக வைத்து பேசி முடிவு எடுக்கிறார் கள்.

விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும். விஜயகாந்த் தலைமையில் நடக்கும் இந்த பேச்சு வார்த்தையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் 4 பேரும் பங்கேற்கிறார்கள். கடலூர், விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்களில் தே.மு. தி.க.விற்கு அதிக செல்வாக்கு உள்ளது. சில தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. களாகவும் இருக்கிறார்கள்.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் இந்த மாவட்டங்களில் அதிகமான ஆதரவு உண்டு. அதனால் விடுதலை சிறுத்தைக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளைத்தான் தே.மு.தி.க.வும் கேட்க கூடிய நிலை ஏற்படக்கூடும். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகளை பிரித்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் அதிக இடங்களில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டால்தான் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்ற நிலை உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும்.

அதில் எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மாமண்டூரில் 10ந்தேதி நடக்கும் கூட்டத்தில் வேட்பாளர் முதல் பட்டியல் அறிவிக்கப்படும். 5 கட்சிகள் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்படுவார்கள். இதில் விஜயகாந்த் பங்கேற்று பேசு கிறார் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

சிறுத்தைகள்தேமுதிகதொகுதிநலக்கூட்டணிமக்கள்விடுதலை
Comments (0)
Add Comment