தொடங்கியது பிளஸ் 2 தேர்வு: தமிழகத்தில் 9,34,868 மாணவ-மாணவியர்கள் எழுதுகின்றனர்

முதல் தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை 9,34,868 பேர் எழுதவுள்ளனர். தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பதற்காக, 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வை 6,737 பள்ளிகளிலிருந்து 4,80,837 மாணவிகளும், 4,17,994 மாணவர்களும், 3-ஆம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 34,868 பேரும், சிறைக் கைதிகள் 98 பேரும் என 9,34,868 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 5,69,304 பேர் தமிழில் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள 2,434 மையங்களில் 46,685 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தத் தேர்வுக்கு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமித்து கூடுதலாக 1 மணி நேரம்) அளிக்கப்படுகின்றன. தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுச்சேரியில்…:
சென்னை மாநகரில் 407 பள்ளிகளிலிருந்து 145 தேர்வு மையங்களில் , 28,721 மாணவிகள், 24,852 மாணவர்கள் என 53,573 பேர் தேர்வெழுதவுள்ளனர்.
புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 143 பள்ளிகளைச் சேர்ந்த 15,660 மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர். இதில், 8,433 மாணவிகள், 7,227 மாணவர்கள் ஆவர்.
செல்லிடப்பேசி அனுமதி இல்லை:
தேர்வு மைய வளாகத்தில் செல்லிடப்பேசியில் பேச தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களும் செல்லிடப்பேசியை எடுத்துவரக் கூடாது. இதை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்லிடப்பேசியோ அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களோ வைத்திருப்பதைக் கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
துண்டுத் தாள் வைத்திருத்தல், பார்த்து எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
பள்ளி அங்கீகாரம் ரத்து: ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயற்சி செய்தால் அந்தத் தேர்வு மையம், தொடர்புடைய பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை:
தேர்வு குறித்த புகார்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவித்து பலன் பெறும் வகையில் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வுக் காலங்களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பலன் பெறலாம்.

ஆசிரியர்கள்தமிழகம்பள்ளிகள்பிளஸ் 2புதுச்சேரிபொதுத்தேர்வு
Comments (0)
Add Comment