தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடப்பாண்டு (2016-ம் ஆண்டு டிசம்பர் வரை) நடத்த உள்ள தேர்வுகள் அந்த தேர்வு குறித்த அறிவிப்பு, தேர்வுகளின் முடிவு வெளியிடப்படும் உத்தேச தேதி ஆகியவை கொண்ட பட்டியலை அதன் தலைவர் கே.அருள்மொழி நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டு 33 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் 5,513 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் குரூப்-4 மூலம் 4,931 பணியிடங்கள், குரூப்-1 தேர்வு மூலம் 45 பணியிடங்கள், 65 உதவி சிறைச்சாலை அதிகாரி பணியிடங்கள், தொகுதி சுகாதார புள்ளிவிவரம் 172 பணியிடங்கள் அடங்கும். சுற்றுலா அதிகாரி 5 பணியிடங்கள், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்கள் முதன் முதலாக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு துறைகள் மூலம் நடப்பாண்டு மேலும் 5 ஆயிரம் காலி பணியிடங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவற்றையும் சேர்த்து மொத்தம் இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு உள்ளது. மழையால் பின் தேதியிடப்பட்டு, அடுத்த மாதம் நடைபெற உள்ள கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) 814 காலி பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நான் பதவியேற்ற பின்னர் 15 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளோம். மேலும் 6 ஆயிரத்து 654 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அனைத்தும் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை பாதிக்காதவாறு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். வருடாந்திர பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:- கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 79 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-1 மெயின் தேர்வு முடிவு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி வெளியிடப்பட்ட 1,241 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 (நேர்முகத்தேர்வு) முதல்நிலைத் தேர்வு முடிவு வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் வெளியாகும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி வெளியிடப்பட்ட 74 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் 2-வது வாரம் வெளியாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட 1,947 காலி பணியிடங்களை கொண்ட குரூப்-2 ஏ (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு முடிவு, வருகிற ஏப்ரல் இறுதியில் வெளியாகும். குரூப்-4 பிரிவில் 4,931 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியாகிறது. குரூப்-1 பிரிவில் 45 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். தொகுதி சுகாதார புள்ளிவிவரம் (பிளாக் ஹெல்த் ஸ்டேடிஸ்டியன்) 172 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.
65 உதவி சிறைத்துறை அதிகாரி காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியிலும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 3-வது வாரத்திலும், 5 சுற்றுலா அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை மாதம் முதல் வாரத்திலும் வெளியிடப்படுகிறது. குரூப்-3 ஏ பிரிவில் 36 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 2-வது வாரத்தில் வெளியாகும். மேற்கண்டவை உள்பட பல தேர்வுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.