நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றம் பிடி ஆணை!

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், விஜயகுமார், சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது நீலகிரி மாவட்ட நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நீலகிரி மாவட்ட பத்திரிகையாளர்  ருசோரியா மரிய சூசை என்பவர் வழக்கு தொடுத்தார். எனினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை. மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதிக்குள் நடிகர்கள் ஆஜராக வேண்டும் என நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்தும் யாரும் ஆஜராகாத நிலையில், உயர்நீதிமன்றம் நடிகர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து, இந்த அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 8 பேரும் உடனடியாக ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நீலகிரி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சரத்குமார்சூர்யாநடிகர்கள் சத்யராஜ்நீலகிரிவிஜயகுமார்
Comments (0)
Add Comment