நடுக்கடலில் தத்தளித்த ஏழு இலங்கை மீனவர்களை அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று காப்பாற்றி சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.
அமெரிக்க கடற்படையின், 7 ஆவது கப்பல்படைப் பிரிவின் USS Decatur என்ற நாசகாரி கப்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது,
அதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றில் இருந்த சிறிலங்கா மீனவர்கள் உதவி கோரியுள்ளனர்..
இதையடுத்து, சிறிய படகு மூலம் மீட்கப்பட்டு அமெரிக்க நாசகாரி கப்பலில் ஏற்றப்பட்டனர்.
தமது படகு செயலிழந்திருப்பதால், கரை திரும்ப முடியாதிருப்பதாகவும் , இலங்கை கடற்படையினருக்கு தகவல் அளிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதையடுத்து, மீனவர்கள் ஏழு பேரும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தநிலையில் கடந்த திங்கட்கிழமை அவர்கள் கரைக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை சிறிலங்கா மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படையின் USS Decatur நாசாகாரியே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தென் சீனக் கடலில் சீனக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் மோதுவது போல நெருங்கி வந்து விரட்டப்பட்டது.
குறித்த சம்பவத்தினால் அமெரிக்கா- சீனா இடையில் முறுகல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.