அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமானவரித் துறையினர் 4 நாட்களாக நடத்திய ஆய்வில் ரூ.65 லட்சம் பணமும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.
இந்நிலையில், நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமானவரித்துறை ஆய்வு நடப்பதை அறிந்ததும் அவரைக் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேர்மையான தலைவராகி விட மாட்டார் எனவும், அனைத்து ஊழல்களும் அவருக்குத் தெரிந்து தான் நடந்துள்ளதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
இதனால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.