ஒரகடம் அருகே உள்ள ஆப்பூரில் நடைபெற்ற நமக்கு நாமே விடியல் மீட்புப் பேரணி நிறைவு விழா பொதுக்கூட்டத்துக்கு உறுதி முழக்கப் பேரணி என்றும், பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்துக்கு அண்ணா திடல் என பெயரிடப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட மேடையில் உறுதி முழக்கப் பேரணி, காஞ்சீபுரம் அத்தியாயம், முடியட்டும் விடியட்டும் ஆகிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இக்கூட்டத்துக்காக பிரம்மாண்ட மேடை அமைத்திருந்தனர். மேடையின் ஒரு பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி படமும், மற்றொரு பக்கம் பெரியார், அண்ணா படமும், தி.மு.க.வின் உதய சூரியன் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது. மேடையிலும் பொதுக்கூட்டத்திடலிலும் எந்த இடத்திலும் மு.க.ஸ்டாலின் படமோ, பேனரோ, கட்–அவுட்டோ வைக்கப்பட வில்லை. மேடையில் அமர்ந்திருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அமர்வதற்காக 1 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டன. பொதுக் கூட்ட மேடையின் அருகில் உள்ள மரக்கிளைகளில் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டன.
பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கொடியின் நிறத்தில் பட்டங்கள் பறக்க விடப்பட்டு, அதை தாங்கி பிடிக்கும் கயிற்றில் கட்சி கொடிகளை கட்டி பறக்க விட்டனர். தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பவர்களுக்காக கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்த மிஸ்டு கால் திட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில், ‘‘தமிழகம் புதுவிடியலை காண, உங்கள் வாழ்வு வளம்பெற ‘மிஸ்டு கால்’ கொடுங்கள்’’ என்ற தலைப்புடன், 72200 72200 எண் அடங்கிய விளம்பர பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. ஒரகடம் பகுதியில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெற்ற ஆப்பூர் பகுதிக்கு செல்லும் வரை, ஒரகடம்– சிங்கபெருமாள் கோவில் 6 வழிச் சாலையின் சென்டர் மீடியனில் நூற்றுக்கணக்கான இரும்பு கம்பங்கள் நடப்பட்டு அதில் தி.மு.க. கொடிகள் பிரம்மாண்டமாக பறக்க விடப்பட்டன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. வினரின் பொறுப்புகளுக்கு ஏற்ப முக்கியத்துவம் அளித்து தனித்தனியே அமரவைக்கப்பட்டனர். மகளிரணியினருக்கும் தனியாக ‘பாக்ஸ்’ ஒதுக்கி இருந்தனர்.
இதன்படி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நகரம், பேரூராட்சி செயலாளர்கள் ஆகியோர் ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிரில் அமர வைக்கப்பட்டனர். அதற்கு பக்கவாட்டு பகுதியில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தி.மு.க.வில் புதிதாக இணைந்துள்ள மாற்றுக் கட்சி பிரமுகர்கள் அமர்ந்தனர். மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் வீரவாள் பரிசு வழங்கினார். குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் படப்பை மனோகரன் பிற்பகல் 2 மணியிலிருந்து மேடையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.