நரேந்திர மோடி அரசு மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது

நரேந்திர மோடி அரசு மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இதனையொட்டி மத்திய அரசின் 100 நாள் சாதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஒவ்வொரு மந்திரியும் ஒவ்வொரு நாள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

முதல் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை 02/09/2014 தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு செயல்படும் அரசு என்பதை மக்கள் இப்போது உறுதியாக நம்புகிறார்கள். இது வெளிப்படையாக தெரியும் பலன். பிரதமர் நரேந்திர மோடி மந்திரிகளுக்கு மிகவும் சுதந்திரம் வழங்கி இருக்கிறார். எங்களுக்கு அவர் கூறியுள்ள ஒரே மந்திரம், ‘நீங்கள் முடிவுகள் எடுப்பதை பெருமையாக கருத வேண்டும். அனைவரும் சொல்வதை கவனியுங்கள், ஆனால் நாட்டுக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுங்கள்’ என்பது தான்.

மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள், 100 நாட்களுக்காக அல்ல. ஆனால் கடந்த அரசின் ‘கொள்கை முடக்குவாதம்’ முடிவுக்கு வந்து, இப்போது முடிவுகள் அனைத்து அமைச்சகங்களிலும் எடுக்கப்படுகிறது. பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த 100 நாட்களில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின்போது வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் நிலுவையில் இருந்த 17 திட்டங்களுக்கு புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கங்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கறைப்படுத்த காங்கிரஸ் சதி செய்கிறது. ஆனால் அவர்களால் மோடி அரசு மீது ஒரு விரலை கூட சுட்டிக்காட்ட முடியாது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் மத்திய அரசின் 100 நாள் நிறைவு குறித்து கேட்டபோது, ‘‘நாட்டில் உள்ள 80 சதவீத மக்கள் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

சோனியா காந்தி 100 நாளில் மத மோதல்கள் தான் அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, ‘‘காங்கிரஸ் எதிர்க்கட்சி போல நடந்துகொள்கிறது. இதுகுறித்து நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.

அதிகரித்துள்ளதுஅரசுஎன்றுகூறினார்.ஜவடேகர்நம்பிக்கைநரேந்திரபிரகாஷ்மக்களின்மத்தியமந்திரிமீதுமோடி
Comments (0)
Add Comment