டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் முப்தி முகமது சயீது சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், நாளை மேற்கொள்ளப்படும் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் முப்தி முகமது சயீத்தின் மகள் மெகபூபா முப்திக்கு இடம் தரப்படும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து முதலமைச்சர் முப்தி முகமது சயீது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் தேவேந்தர் ரானா முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.