நல்லூரில் சிங்களப் படை அணிவகுப்புக் காட்சியானது மதரீதியாகத் தமிழர்களை ஓரங்கட்டுவதற்கானது !

யாழ். நல்லூர் கோவில் திருவிழாவின் இறுதி நாளில், திகைப்பூட்டும் வகையில் பெருந்தொகையான சிங்களப் படைகள் தமிழர்களின் பாரம்பரிய கோவிலுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட “பக்தி” என்னும் போர்வையில், ஒரு படையணிவகுப்பை மேற்கொண்டனர். ஈழத் தமிழர்களின் மதத்தை நுணுக்கமாகக் கேலிசெய்வதுடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தியவாறு, அவர்களிடமிருந்து மதத்தைக்கூட சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் பறித்தெடுப்பார்கள் என்னும் ஒரு செய்தியைக் கொடுக்கும் நோக்கத்தை இலக்காகக்கொண்டே இந்த படை அணிவகுப்பு காட்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முருகனுக்காக சிங்களப் படைகளால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட “பக்தி” ஆனது, திட்டமிட்ட இனவழிப்பின் மற்றுமொரு ஆயுதமாக உருவெடுத்திருப்பதோடு, ஆக்கிரமிப்புச் சிங்களப் படைத் துருப்பினருக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் தற்போது கட்டப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான வீடுகள் இதை ஏற்றுக்கொள்வதாக அமைகிறது, என யாழில் இருந்து செய்தி மூலங்கள் தெரிவித்தன.

இவ்வாறாகவே தெற்கில் கதிர்காமத்தில் அமைந்துள்ள சைவத் தமிழர்களின் முருகன் கோவில்   சிங்களவர்களின் பெரும் எண்ணிக்கையிலான படையெடுப்பு மற்றும் அச்சமூட்டும் காட்சிகளால் பல தசாப்தங்களுக்கும் மேலாக சிங்கள பௌத்தர்களால் கைப்பற்றப்பட்டது. இதேவகையான முயற்சியையே சிங்களவர்கள் மன்னாரிலுள்ள தமிழ்க் கத்தோலிக்கத் திருத்தலத்துக்கும் செய்துவருகிறார்கள்.அது தற்போது ஆக்கிரமிப்புப் படையின் காட்சியோடு நல்லூரில் நடைபெறத் தொடங்கிவிட்டதாக, அந்த திருநாளில் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொண்ட தமிழ்ப் பக்தர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

இந்த முழுமையான காட்சியையும் சிறிலங்கா இனப்படுகொலை அரசு “நல்லிணக்கம்” என்ற திட்டத்தில் செயல்படுத்தும் போது, அந்தக் கோரிக்கைக்கு ‘ஃபிடில்” வாசித்து இந்தப் படைச் செயற்பாட்டை ஆதரிப்பதற்கு புதுடில்லியும் வோஷிங்டனும் இருக்கின்றன, என அந்த பக்தர்கள் மேலும் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு சிறிலங்காப் படைகளின் 51 மற்றும் 52 ஆவது படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிங்களப் படையினர் ஊர்திகளில் கொண்டுவரப்பட்டு, நான்கு அணி வரிசைகளில் நடக்கவிடப்பட்டனர். அவர்களுள் சிலர் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் எடுத்து ஆட்டம் போட்டனர்.

யாழ் குடாவில் மட்டும் 40,000 இற்கும் மேற்பட்ட சிறிலங்கன் படையினர் ஆக்கிரமித்துள்ளனர் என தமிழர் தரப்பு தகவல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அரசு, படையினரின் தொகை 18,000 ஆகக் குறைத்து ஒரு பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை, அவசர அவசரமாக சிறிலங்காப் படையினர் வலிகாமம் வடக்கில் “சிங்களப் படை வலயத்துள்” (Ainhala Military Zone- SMZ) கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிவருகின்றனர். இந்த “சிங்களப் படை வலயமானது” (SMZ) ஈழத் தமிழர்களிடமிருந்து நிரந்தரமாகவே கையகப்படுத்தப்பட்ட காணிகளாகும். அவை, செழிப்பான மீன்பிடிப் படுக்கைகள் அமையப்பெற்ற கடற்கரை மற்றும் வளமான விவசாய நிலங்களில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த ஈழத்தமிழர்களை வெளியேற்றிவிட்டு அபகரிக்கப்பட்டவை ஆகும். படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலங்கள் முன்னர் “உயர் பாதுகாப்பு வலயம்” ஆக எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

அந்த “சிங்களப் படை வலயத்துள்” 8,000 கொத்துக் கொத்தான வீடுகள் முற்றாகக் கட்டிமுடிக்கப் பட்டுள்ளதாக இந்த வாரம் தமிழ்நெற் இணையத்துக்கு தகவல் வழங்கிய மூலங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மேலதிகமாக 7,000 வீடுகள் கட்டுவதற்கான ஏற்படுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அந்த “சிங்களப் படை வலயத்துள்” ஒரு பட்டினக் குடியிருப்பை உருவாக்கி, சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் 15,000 குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளன. அத்துடன், பாடசாலைகள் மற்றும் உட்கட்டுமானத் தளங்களை கட்டுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த மூலங்கள் தெரிவித்தன.

மேலும், “சிறிலங்கா கம்பெய்ன்” (Sri Lanka Campaign) ஆதரவாளர்கள் குழுவின் கோரிக்கைக்கு இணங்க, வோஷிங்ரனை தளமாகக் கொண்ட அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்கச் சபையின் (AAAS ) புவியியல் சார் தொழில்நுட்பங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்டரீதியான நிகழ்ச்சித்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய செய்மதிப் புகைப்படத்தின் ஆய்வு ஆனது, “சிங்களப் படை வலயத்துள்” புதிய “குடியிருப்பு வகை” கட்டமைப்புகள் கட்டப்பட்டுவருவதை நிரூபித்திருந்தது. இந்த மாத ஆரம்பத்தில் AAAS   நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “குறிப்பாக 2011 – 2014 இற்கு இடைப்பட்ட “வீடமைப்பு வடிவ” கட்டமைப்புகளில் ஆச்சரியப்படக்கூடிய் ஒரு திடீரென்ற அதிகரிப்பானது மிகவும் வெளிப்படையான மாற்றமாக இருந்தது, என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த படை வலயத்துள் இனங்காணப்பட்ட 18 தளங்களில் பயிர்ச் செய்கை மற்றும் ஏனைய நிறுவன ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அந்த அறிக்கை ஆவணப் படுத்தியிருந்தது.

-கலைவண்ணன்-

அணிவகுப்புக்ஓரங்கட்டுவதற்கானது !காட்சியானதுசிங்களப்தமிழர்களைநல்லூரில்படைமதரீதியாகத்
Comments (0)
Add Comment