யாழ் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிங்கள மீனவர்கள்
முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக தான் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளபோதும் . எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு, சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அதனை தடுக்க முடியாத நிலையில் தாம் இருக்கின்றோம் என்றும்.
இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.