இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாளையொட்டி சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைத்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசியலமைப்பு முகவுரையில், சமத்துவம், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை, சட்டமேதை அம்பேத்கர் சேர்க்கவில்லை என்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லை என்ற போதிலும், நாடு மதச்சார்பின்மையுடன் உள்ளதாகவும், ஜனநாயகம் தழைத்தோங்க நேரு சிறந்த பங்களிப்பை தந்திருப்பதாகவும் கூறினார். மதச்சார்பின்மை என்ற வார்த்தையை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அரசியலமைப்புச் சட்டம் குறித்து பேசினார். மாநிலங்களவையில், 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.