சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தாம் தவறு செய்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கமாக பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, எனக்கு அரசியல் வாழ்வை நீங்கள்தான் கொடுத்தீர்கள். நீங்கள் இல்லை என்றால் 1993ல் என் அரசியல் வாழ்வு அழிந்து போயிருக்கும்.
என்னிடத்தில் என்ன குறைகள் என அமைதியாக யோசிக்கும்போது, அவைகளை நான் உணர்கிறேன். அதற்கு என்ன காரணம் என்பதையும் நான் அறிகிறேன் என மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், கட்சி முன்னேற வேண்டும் என்பதைத் தவிர எந்த சிந்தனையும் எனக்கு கிடையாது. நம் குறைகளை சுட்டிக்காட்டி பெரிதுபடுத்திய பத்திரிகைகளோ, ஊடகங்கள், ஊர் ஊராக வெயிலில், மழையில் நடந்து, உடல் நலிவுற்று ரோட்டின் ஓரத்தில் கட்டாந்தரையில் துண்டை விரித்துப் படுத்துக் கிடந்ததை நினைத்து பார்க்கக் கூடவில்லை.
ஒன்றே முக்கால் ஆண்டு சிறையில் இருந்தபோது நான் கவனமாக இருந்தேன். நீங்கள் தலை குனிந்துவிடக் கூடாது என்பதற்காக மிகக் கவனமாக இருந்து வந்தேன். பிணையில்கூட வராமல் இருந்தது நீங்கள் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். அப்படி எல்லாம் கவனமாக இருந்தும் இந்த முறை என் மீது பழிச்சொல் வந்திருக்கிறது. அ.தி.மு.க.விடம் இருந்து 1,500 கோடி வைகோ வாங்கியிருக்கிறார் எனச் சொல்லும்போது, அக்கிரமமாக போட்டிருக்கிறார்கள் என அலட்சியப்படுத்தி விட்டேன்.
அதைப் பொருட்படுத்த ஆரம்பித்தால் அது மிகப்பெரிய செய்தியாகும் என மனதளவில் நினைத்து அதை தவிர்த்தேன். இதற்கு நான் முக்கியத்துவம் கொடுத்து பதிலளித்தால், கேள்விதான் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மனதில் பதியும். பதில் நிற்காது என எண்ணினேன். அடுத்து என்னைப் பற்றி முடிவெடுக்கும் பிரச்னையில், நானாக யாரையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது ஒரு தவறு தான். நான் போட்டியிட மாட்டேன் என்ற செய்தியை நானாக எடுத்திருக்க கூடாது.
என்னைக் குறித்து நான் முடிவெடுக்கும்போது அது தவறாக முடிகிறது. அதைச் சிலரிடம் கேட்டு தான் செய்ய வேண்டும். 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்து வந்த உடன் நான் போட்டியிட்டிருக்க வேண்டும். என் பொது வாழ்வில் நான் செய்த மிகபெரிய தவறு. அந்த முடிவு எவ்வளவு பெரிய பாதிப்பை கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் பரிபூரணமாக உணர்கிறேன். சென்றது இனி மீளாது. கறந்த பால் மடி புகாது. இங்கே தவறு செய்தேன். பிழை செய்தேன் என்பதை இப்போது நான் உணர்கிறேன். எடுக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் பல பிரச்னைகளில் பல குறைகள் இருக்கின்றன அது தவிர்க்க முடியாமல், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
அதனால் பாதகம் ஏற்பட்டிருக்கிறது என்பது எனக்கு உள்ளூர தெரிகிறது. இனி இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல எந்த வகையில் பாடுபடுவது என்பது குறித்தும், நான் சோர்ந்து விடக்கூடாது என நானே நினைக்கிறேன். என் உடல்நலம் கெட்டுவிடக் கூடாது என கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது மனசு லேசாக இருக்கிறது. என் சுமையை இறக்கி வைத்து விட்டேன். கடந்த கால பிழைகளை மனதில் நினைத்து, எப்படி செல்ல வேண்டும் என்பதை தீர்க்கமாக ஆலோசித்து செயல்படுவோம் என வைகோ உருக்கமாக பேசியுள்ளார்.