இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய தமிழர்கள் அல்ல, தமிழர்கள் என்பதே உங்கள் அடையாளம் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலையக மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடைய உரையில் மேலும் தெரிவிக்கையில்,
மிகவும் கடினமான வாழ்க்கைக்கு மலையக வாழ் மக்கள் முகம்கொடுத்த வண்ணமிருக்கின்றார்கள். அரசியல் சமூக பொருளாதார ரீதியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த வண்ணமிருக்கிறார்கள். மலையக மக்களுக்கு கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு சர்வதேசம் வரை அவர்களின் பிரச்சினைகள் செல்ல தேவையில்லை. தேசிய அளவில் அப்பிரச்சினைகள் சென்றாலே போதுமானவையாக கருதுகின்றார்கள். தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் ஒன்றிணைந்து அம்மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக முன்னகர்த்தி தற்போது தேசிய ரீதியில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்திய தமிழர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவ்வாறு அழைக்கப்படுவதனால் சில நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு சுட்சமமான சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றார்கள். நாம் இந்திய தமிழர்கள் அல்ல தமிழர்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் வந்திருந்தபோது தமிழர்கள் என அடையாளப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் தமிழர்கள் எனக் கூறினார். மலையக மக்களை வாக்குவங்கிகளாக பயன்படுத்தும் நிலைமையே நீடிக்கின்றது. பிரதேச சபைகளில் அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்கின்ற போதும் அவர்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் ஊடாக மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்குறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத தோட்டங்களை 2 அல்லது 3 ஏக்கர்களாகப் பிரித்து தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் வாழும் மலையக மக்கள் உட்பட நாடாளவிய ரீதியில் வாழும் மலையக மக்களின் அபிவிருத்திகளையும் பாதுகாப்பும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
தோட்டச் சிறைகள் உடைக்கப்பட்டு மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் தன்மானத்துடன் வாழ்வாதார தரம் உயர்ந்தவர்களாக மாற்றியமைப்பதையே நாம் இலக்காக கொண்டிருக்கின்றோம் என்றார்.