நெல்லையில் விவசாயிகளுக்கு முழுமையான வறட்சி நிவாரணம்: இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு முழுமையாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வர்தா புயல், வறட்சி நிவாரணத் தொகையினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் வறட்சி நிவாரணப் பணியினை தொடங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு நெல் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம், கரும்புக்கு ரூ. 30 ஆயிரம், வாழைக்கு ரூ. 75 ஆயிரம், தென்னை ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தாமிரவருணி நீரை பயன்படுத்தி கங்கைகொண்டானில் இயங்கி வரும் குளிர்பான ஆலைகளை தடை செய்ய வேண்டும்.

விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 3 மாதங்களாக வழங்கப்படாத கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.

ஊரக வேலைத்திட்டத்தில் ரூ. 400 தினக்கூலி வழங்க வேண்டும். ஊரக வேலைத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். ஏரி, குளங்கள் மராமத்து பணியினை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.வி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, மாவட்டச் செயலர் எஸ். காசிவிஸ்வநாதன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம். தங்கவேல், மாவட்டச் செயலர் எம்.எஸ். முத்துசாமி, விவசாயிகள் சங்கச் செயலர் ஆர்.கசமுத்து, மாநிலத் துணைத் தலைவர் பி. பெரும்படையார், மாநிலக்குழு உறுப்பினர் பி.பொன்னுசாமி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஆர். நல்லகண்ணுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிநெல்லைவறட்சி நிவாரணம்விவசாயிகள்
Comments (0)
Add Comment