சென்னை பட்டாளம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அங்குள்ள பூங்கா, மணிக்கூண்டு உடற்பயிற்சிகூடம், கழிவறை போன்றவற்றை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. குறுகிய சாலையாலும் வாகனப் பெருக்கத்தாலும் கடும் நெரிசல் தினமும் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காலையில் இருந்து இரவு வரை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுவதால் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சி நிர்வகித்து பராமரித்து வந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அகற்றக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். சாலை விரிவாக்கம் செய்வதற்கு தடை செய்யக்கூடாது, பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி பணிகளை தொடர்ந்து செய்யலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக பட்டாளம் மணிக்கூண்டு அருகில் உள்ள பூங்காவை நேற்று மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் தலைமையில் அகற்றும் பணி நடந்தது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்து சேனா அமைப்பு சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து சாலை விரிவாக்கத்திற்கான பணிகளை அதி£ரிகள் செய்ய தொடங்கினார்கள். ஒரு சில நாட்களில் மணிக்கூண்டும் அகற்றப்பட உள்ளது.
உடற்பயிற்சி மையம், கழிப்பறை கட்டிடம் போன்றவற்றையும் இடித்து சாலையை விரிவுப்படுத்துகிறார்கள். பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பூங்கா வேறு இடத்தில் அமைகிறது. அதற்கான இடத்தையும் மாநகராட்சி ஒதுக்கி கொடுத்துள்ளது.