பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு வல்லுனர் குழு சிபாரிசு

ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு வல்லுனர் குழு சிபாரிசு செய்துள்ளது. குறைந்தபட்ச பயண தொலைவும் அதிகரிக்கிறது.

வல்லுனர் குழு அறிக்கை

ரெயில்வேயில் தற்போதைய வருவாய் கட்டமைப்பினை ஆய்வு செய்யவும், நலிவுற்ற நிலையில், வருவாயை பெருக்குவதற்கான வழிகளை கண்டறியவும் கடந்த 4–ந்தேதி முன்னாள் நிதிப்பணிகள் துறை செயலாளர் டி.கே.மிட்டல் தலைமையில் 9 உறுப்பினர்களை கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

இந்த வல்லுனர் குழு தனது அறிக்கையை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம் நேற்று முன்தினம் அளித்தது. வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரெயில்வே பட்ஜெட்டில், அந்த துறைக்கான வருவாயை பெருக்குவதற்காக அறிவிப்புகளை வெளியிடுவதில், இந்த அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

கட்டண உயர்வுக்கு பரிந்துரை

பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு இந்த குழு சிபாரிசு செய்துள்ளது. குறிப்பாக, ‘புறநகர் ரெயில் சேவையில் ஏற்பட்டு வருகிற இழப்பினை சரிக்கட்டி, லாபம் அடையத்தக்க நிலைக்கு கொண்டு வரவேண்டும், அந்த வகையில் புறநகர் ரெயில் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் 2 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும்’ என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது புறநகர் ரெயில் கட்டணம், பஸ் கட்டணத்தை விட 60 சதவீதம் குறைவாக இருப்பதாக வல்லுனர் குழு கண்டறிந்து, அதன் அடிப்படையில் ரெயில் கட்டண உயர்வை வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில், தொலைதூர மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டண உயர்வு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று வரையறுத்து எதுவும் கூறப்படவில்லை.

குறைந்தபட்ச பயண தொலைவு

தற்போது பயணிகள் ரெயிலில் (மெயில்) குறைந்தபட்ச பயண தொலைவு 10 கி.மீ. என்றிருப்பதை 20 கி.மீ. ஆகவும், எக்ஸ்பிரஸ் ரெயிலில் 50 கி.மீ. என்றுள்ளதை 100 கி.மீ. என்றும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மெயில் ரெயில்களில் தற்போது ஒரு பயணி 10 கி.மீ. தொலைவுக்கு குறைவாக பயணித்தாலும், 10 கி.மீ. தொலைவுக்கு உரிய கட்டணம் செலுத்துகின்றனர். இனி 20 கி.மீ. தொலைவுக்குரிய கட்டணத்தை பயணிகள் செலுத்தும் நிலை வரும். இதேபோன்று எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 50 கி.மீ. தொலைவுக்கு குறைவாக பயணம் செய்தாலும், 50 கி.மீ. தொலைவுக்கான கட்டணம் செலுத்துகின்றனர். இனி அது 100 கி.மீ. ஆக உயரும்.

உயர்வு எப்போது?

ரெயில்வேயில் செலவுகளை குறைப்பதற்கான வழிமுறைகளையும் வல்லுனர் குழு ஆராய்ந்து அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெயில் கட்டண உயர்வு குறித்த வல்லுனர் குழு அறிக்கையை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பரிசீலித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசித்து, கட்டண உயர்வை உடனே அறிவிப்பதா அல்லது பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யவுள்ள ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பதா என்பதை முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிப்புஆய்வுஉயர்வுகட்டணம்கட்டமைப்புகுழுசிபாரிசுநலிவுபயணம்ரெயில்வருவாய்வல்லுனர்
Comments (0)
Add Comment