சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
இச் சந்திப்பின் போது, நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விஷேட கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுள்ளது.
சபாநாயகரின் அழைப்பின் பேரில் நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்திப்பை மேற்கொண்டனர்.
இதன்போது நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐ. தே. கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலான கட்சிகளின் பிரதிநிதிகள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்து, பெரும்பான்மையானோரின் கருத்தை முடக்குவதனால் ஜனநாயகம் மீறப்படுகிறதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை , கூட்டத்தில் பங்கேற்ற புதிய அமைச்சரவையின் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம மற்றும் விஜேதாஸ ராஸபக்ஷ ஆகியோர், புதிய பிரதமரின் நியமனமும், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதும் சட்டரீதியாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இதற்கு தீர்வைக் காண தாம் தலையீடு செய்வதாக சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் அனுப்பபட்ட கடிதம் ஒன்று தொடர்பிலும் நேற்றைய கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.