பருவ மழையை எதிர்பார்க்கும் மக்கள்

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்த, நிலையில் வெப்பத்தின் அளவு குறைந்து பருவமழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.  ஆனால் இதற்கு எதிர்மறையாக வெப்பத்தின் அளவு எதிர்பார்த்த அளவு குறையாமல், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் சராசரியாக 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது.  

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு எப்போது குறையும்?, பருவமழை எப்போது பெய்யக்கூடும்? என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று காலை 8½ மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர கணக்கீட்டின்படி, மானாமதுரை 4 செ.மீ., வெண்பாவூர் 2 செ.மீ., நன்னிலம் 1 செ.மீ., அளவும் மழை பதிவானது.  அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை சுற்றுப்புறப்பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படும். இதனால் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  அதேபோல் அதிகபட்சமாக 102.2 டிகிரியும், குறைந்தபட்சம் 84.2 டிகிரி வரை இன்று வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் தென்மேற்கு திசையில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. மீனவர்களுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவில் எந்த முன்னெச்சரிக்கையும் தற்போது இல்லை.  அக்னி நட்சத்திரம் முடிவடைந்து ஓரிரு நாட்கள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு படிப்படியாக குறையும்.

முற்றிலுமாக குறைந்த உடன் பருவமழை தொடங்கும் சூழ்நிலை ஏற்படும். மழையின் அளவையும், காற்றின் வேகத்தையும் அடிப்படையாக கொண்டு தான் பருவமழை தொடங்கும் தேதியை குறித்து சொல்ல முடியும்.  எனவே பருவமழை திட்டமிட்ட தேதியில் இருந்து 4 நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ தொடங்கலாம். அதன்படி பார்த்தால் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

அக்னிகத்திரிவெயில்நட்சத்திரம்பொதுமக்கள்மழைமுடிவுமையம்வானிலைவெப்பம்
Comments (0)
Add Comment