தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை துறைமுகத்துக்கு வர வேண்டிய அத்தனை வருவாயும், அண்டை மாநிலத்துக்கு செல்கிறது என்ற காரணத்தால், சென்னை துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மதுரவாயல் பறக்கும் பாதை திட்டம் உருவாக்கப்பட்டது.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன்சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதல்-அமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. பொறுப்பேற்ற நிலையில், கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15 தூண்களும் ஆற்றின் நீரோட்டத்தன்மையைப் பாதிக்கும் என்று சொல்லி, தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தது. “இந்தத்திட்டம் கைவிடப்பட்டால் ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதோடு சென்னைத் துறைமுகத்தின் வருவாய் அடியோடு குறையும். இந்தத் திட்டம் கைவிடப்படும் அபாயம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, “உகந்த சூழ்நிலை வந்தால் இந்தத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்” என்று “தினத்தந்தி” விரிவாக வெளியிட்ட செய்தியைத்தான் மற்ற நாளிதழ்களும் பக்கம் பக்கமாக எழுதி, போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் நல்ல திட்டம் ஒன்று கைவிடப்பட்டுவிடுமே; அதனால் சென்னை மாநகருக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விடுமே என்று பதற்றத்தை வெளியிட்டன.
மதுரவாயல்-துறைமுகம் சாலையை நம்பி, ஏராளமான நிறுவனங்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்கத் திட்டமிட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் பணிகளை நிறுத்தி விட்டன. சென்னைத் துறைமுகம்; ஸ்ரீபெரும்புதூர் அருகே 3,600 கோடி ரூபாய் செலவில் மிகப் பெரிய “கண்டெய்னர் டெர்மினலை” அமைக்கத் திட்டமிட்டிருந்தது. மேலும் 500 கோடி ரூபாய் செலவில் மற்றுமொரு உலர் துறைமுகப் பணிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இரண்டு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாம். இந்தத்திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
அந்த வழக்கு 12-8-2013 அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதியரசர் அகர்வால், நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்குப் பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அவர்கள் அவகாசம் கேட்டு வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. வரும் 19-ம் தேதி இறுதிக்கெடு விதிக்கப்படுகிறது. அன்று அரசு பதில் அளிக்க வேண்டும். தவறினால் நாங்களே முடிவெடுப்போம்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்கள்.
இவ்வாறு சகல தரப்பினரும், அதிகாரிகளும், அனைத்து நாளேடுகளும், மத்திய அரசும் இந்தப் புதிய திட்டம் எவ்வளவு அவசர அவசியமானது என்று சொல்கின்ற நேரத்தில்; தமிழக முதல்-அமைச்சரின் முடிவு காரணமாக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட ஒரு திட்டம் முடக்கி வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக திட்டமிடப்பட்ட இவ்வளவு பெரிய இந்தத் திட்டத்தை முடிக்க உதவிடக்கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழக அரசிடம் தொடர்ந்து நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. இவ்வளவிற்கும் பிறகு அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் உண்மை.
தி.மு.க. ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்து விட்ட காரணத்தால்தான், இந்தப்பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், 872 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது. முக்கியமான இந்த நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டம் என்னதான் ஆயிற்று என்று மத்திய அரசின் அப்போதைய தரைவழிப் போக்குவரத்துத் துறை மந்திரி பெர்னாண்டஸ் செய்தியாளர்கள் கேட்ட நேரத்தில், “மாநில அரசு அதன் நிலை பற்றித் தெளிவாகத் தெரிவிக்காததாலும், நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலே ஏற்படும் தாமதத்தைப் போக்காததாலும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்காக நிதி அளிக்க மறுத்து வருகின்றன’’ என்று சொல்லியிருக்கிறார்.
பிரதமர் அலுவலகமும், மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளும் எத்தனையோ முறை எவ்வளவோ எடுத்துரைத்தும், இடித்துரைத்தும், நீதிமன்ற நடவடிக்கை மூலமாகத் தீவிரமாக முயற்சி செய்தும், 1,815 கோடி ரூபாய் செலவில் நிறைவேறியிருக்க வேண்டிய-சென்னை மாநகரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திடும் மாபெரும் திட்டம் முடக்கப்பட்டு தற்போது ஒப்பந்தமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.