மத்திய அரசின் LED விளக்குகள் திட்டத்தினை, தமிழகத்தில் அதிமுக அரசு செயல்படுத்தாததற்கு அதில் கமிஷன் கிடைக்காது என்பதே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை செல்லூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியதே, தமிழகத்தில் ஊழல் பெருக காரணம் எனக் குறிப்பிட்ட பிரகாஷ் ஜவடேகர், வரும் தேர்தலில், இதனை மாற்ற வாக்காளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என குறிப்பிட்ட பிரகாஷ் ஜவடேகர், தமிழகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பாரதிய ஜனதாவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுகொண்டார். முன்னதாக பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் நாத்திகத்திற்கு மாற்றாக ஆத்திகம் ஆட்சி செய்ய உறுதி கொண்டுள்ள கட்சி பாரதிய ஜனதா மட்டுமே என்றார்.