பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு: முதல்வர் ஜெயலலிதா

மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள், வீடுகள் மற்றும் கால்நடைகள், படகுகள் இழப்பு உள்ளிட்டவற்றிற்கு நிவாரண தொகையை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் மின்விநியோகம் பாதிக்கப்பட்ட 683 ஊராட்சிகளிலும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடுகள், உடமைகளுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் கரை உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு அவை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருப்பதாகவும், 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 26 ஆயிரத்து 448 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், மழைநீர் வடிந்த காஞ்சிபுரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 மழையால் பாதிக்கப்பட்ட பயிர்ச்சேதங்கள் ஆய்வு செய்து மதிப்பிடப்பட்டு, அவற்றிற்கான இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், குடிசைகள், கால்நடைகள் மற்றும் படகுகள் இழப்பு ஆகியவை கணக்கிடப்பட்டு, அவற்றிற்கான நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இழப்பீடுகள்கடலூர்கனமழைஜெயலலிதாநிவாரண தொகை
Comments (0)
Add Comment